குறள்: உவப்பத் தலைக்கூடி உள்ளப் பிரிதல் அனைத்தே புலவர் தொழில்

பொருள்: மகிழ்ச்சி பொங்கிடச் சேர்ந்து பழகுவதும், பிரிந்திட நேரும் போது மனங்கலங்குவதும் அறிவிற் சிறந்தோர் செயலாகும்.

இவ்விரு வரிகள் தமிழ்ச்சமூகத்தின் முதல் புரட்சியாளர் திருவள்ளுவர் ஏறக்குறைய 2000 ஆண்டுகளுக்கு முன் சொல்லி வைத்தது.
ஜனவரி 27, 2024 அன்று தென் கலிஃபோர்னியா தமிழ்ச்சங்கம் நடத்திய பொங்கல் திருவிழாவில் 1200-க்கும் மேற்பட்ட தமிழர்கள் “உவப்பத் தலை கூடி, உள்ளப் பிரிதலை” ஏற்படுத்திச் சென்றுள்ளனர். அறிவிற் சிறந்த சமூகத்தில் இது இயற்கைதானே!
முழுக்க முழுக்க தன்னார்வலர்களால் இணைந்து நடத்தப்பட்ட இந்தத் திருவிழா – தென் கலிஃபோர்னியா தமிழ்ச்சங்கத்தில் இது வரை நடந்த பொங்கல் திருவிழாக்களில் உண்மையில் இது பெருவிழா.

3 முறை இடம், பொருள் மற்றும் பருவ மழையும் சேர்ந்து பல சவால்களை முன்னிறுத்தி இருப்பினும், எங்கள் தன்னார்வலர்கள் ஒன்று கூடி “இர்வைன் வில்லியம் மேசன்” பூங்காவில் இழுத்தது மாபெரும் பொங்கல் தேர்.
3-மாதங்களுக்கும் மேலாக திட்டமிட்டு, 200-தன்னார்வலர்களுக்கும் மேலாக, 20-குழுக்களுக்கும் மேலாக இணைந்து நடத்தி இருக்கும் இந்தத்திருவிழா உண்மையில் ஒரு கண் கொள்ளாக்காட்சி.

ஒரு புறம் மகாகவி பாரதியும், மற்றொரு புறம் திருவள்ளுவரும் தங்கள் பொன் மொழிகளோடும், மாவிலைகளும், தோரணங்களும், கரும்புகளும், பாரம்பரிய தமிழ் வீடும் அனைவரையும் வரவேற்றது – தென் கலிஃபோர்னியா தமிழ்ச்சங்கத்திற்கே உரிய அலங்கார வரவேற்பு. அவற்றின் முன் நம் குடும்பங்கள் எடுத்த படங்கள் அவர்களுக்கு எப்போதும் இனிய நினைவையும் மகிழ்ச்சியையும் அளிக்கும். மேலும் ஒரு சிறப்பு என்னவென்றால் பூங்காவில் வந்து சென்ற பல பொது மக்கள், நம் அழகான பொங்கல் அலங்காரங்களுடன் படம் எடுத்துச் சென்றார்கள். பொங்கல் திருவிழா அலங்கார வேலைகளை தன் வீட்டு வேலை போல் திட்டமிட்டு சுறுசுறுப்பாக செய்து முடித்து இருக்கும் Women Empowerment Team சகோதரிகள், பிரேயா-இர்வைன் தமிழ்க்கல்வி சகோதரர்கள்-சகோதரிகள் அனைவருக்கும் நன்றி & வாழ்த்துகள்.
உணவளிக்கும் உழவர்களுக்கு நன்றி சொல்ல, எங்கள் பிரேயா-இர்வைன் தமிழ்க்கல்வி சகோதரிகள் அன்பால் இணைந்து அறிவால் நெருப்பூட்டி சக்கரைப் பொங்கல் சமைத்தார்கள். பொங்கல் பொங்கி வந்த நேரம், “பொங்கலோ பொங்கல்!” என அனைத்து குழந்தைகளும் கூடிச்சொன்ன அந்த நொடி – உண்மையில் நம் தென் கலிஃபோர்னியா தமிழ்ச்சங்கத்தின் உயிர் நாடி.

500-குழந்தைகளுக்கும் மேல் பங்கு பெற்று, நம் தென் கலிஃபோர்னியா தமிழ்ச்சங்கத்தை டீ-ஷர்ட் ஆக தங்கள் இதயத்தில் தாங்கியது, என்றும் நம் அனைவரின் இதயத்தில் தங்கியது. இந்த டீ-ஷர்ட் விளம்பரதாரர் Darryl & Jones அவர்களுக்கு எங்கள் நன்றி.

ஒரு புறம் எங்கள் தமிழ் இளங்காளையர்களும், வீரக்குமரிகளும் பங்கேற்ற கைப்பந்தாட்டம், மறுபுறம் சிறார்களுக்கான துள்ளிக்குதிக்கும் வீடுகள் (bounce house), உறியடி (piñata), சாக்கு ஓட்டம், hula hoop, பலூன் போட்டி இன்னும் எத்தனையோ விளையாட்டுகள் விறுவிறுப்பாக நடைபெற்றன. இந்த விளையாட்டுப் போட்டிகளை திறம்பட நடத்தி கொடுத்த பிரேயா, இர்வைன், ஈஸ்ட்வேல், மிஷன் வியஹோ தமிழ்க்கல்வி சகோதர-சகோதரிகள் அனைவருக்கும் நன்றி.
பெரியோரும் சிறியோரும் பங்கேற்ற கோலப் போட்டி – நுண் கலைகளில் அடுத்த தலைமுறை தமிழ்ப்பிள்ளைகள் சற்றும் சளைத்தவர்கள் இல்லை என்பதை பறைசாற்றியது. இந்த கோலப்போட்டிகளை திறம்பட நடத்தி கொடுத்த மிஷன் வியஹோ, இர்வைன், பிரேயா, ஈஸ்ட்வேல், தமிழ்க்கல்வி சகோதரிகள் அனைவருக்கும் நன்றி.

எங்கள் தமிழ்க் குடும்பங்கள் ஒரு புறம் நாளைய அமெரிக்காவை தங்கள் அறிவுத்திறமையால் கட்டமைத்துக் கொண்டே, மறு புறம் நம் தமிழ்க்கல்வி மாணவர்களுடன் இணைந்து போட்டிருந்த கடை வீதி – நாளைய நியூ யார்க் வால்ஸ்ட்ரீட். சிறு குழந்தைகளும்-பெற்றோர்களும் இணைந்து கைத்தறி-பட்டு புடவை முதல், ஆடைகள், நீர் மோர், இளநீர், அழகான பூச்சரங்கள், பாரம்பரிய கேப்பை லட்டு, சுவையான சமோசா, மசால் கடலை, தமிழ்ப் புத்தகங்கள், கைவினைபொருட்கள், மேலும் பல அரிய பொருட்களை கடை வீதியில் விற்றது நாளைய தொழில் முனைவோரை உருவாக்கும் ஒரு சிறு முயற்சி.
எங்கள் ஈஸ்ட்வேல் தமிழ்க்கல்வி தன்னார்வலர்களுக்கு அளிக்கப்பட்ட பெரும் சவால் இந்த பொங்கல் திருவிழாவில் அனைவருக்கும் உணவு பரிமாறுவது. அவர்கள் இந்தப் பெரும் சவாலை சமாளித்து மாபெரும் வெற்றி பெற்றுள்ளனர். அஞ்சப்பர் உணவகத்தினர் மிகச்சுவையான விருந்து தயாரித்து வந்தனர். உணவகத்தாருக்கு நன்றி. கைக்குழந்தைகள் முதல் முதியவர்கள் வரை அனைவரையும் முக மலர்ந்து வரவேற்று, கேட்டுக்கேட்டு விருந்து பரிமாறிய ஈஸ்ட்வேல் தமிழ்க்கல்வி குழுவிற்கு நன்றி & வாழ்த்துகள். அவர்களுக்கு உறுதுணையாக இருந்த பிரேயா, இர்வைன், மிஷன் வியஹோ தமிழ்க்கல்வி சகோதரர்கள் அனைவருக்கும் நன்றி.

காலை முதல் மாலை வரை பொங்கல் திருவிழா சிறு தொய்வு கூட இல்லாமல் களை கட்டியது. இன்னும் பல நிகழ்ச்சிகள் வழங்க நேரம் போத வில்லை. ஆதி தமிழர்கள் ஏன் பொங்கல் விழாவை 4-5 நாட்கள் திருவிழாவாக பிரித்து வேறு வேறு நாட்களில் கொண்டாடி மகிழ்ந்தார்கள் என்பதை உண்மையில் நம் தமிழ்ச்சங்கம் இன்று உணர்ந்தது.
யாதும் ஊரே-யாவரும் கேளீர் என்ற பொருளில் உலகத்தில் எழுந்த முதல் குரல் நம் தமிழ்க்குரல். ஒரு புறம் இனம், மதம், அரசியல், ஆன்மீக எல்லைக்கோடுகள் தமிழர்களை வைத்து ஒவ்வொரு புறமும் இழுத்து வென் வரைபட விளையாட்டில் ஈடுபட்டு இருந்தாலும், தமிழ் எனும் ஒற்றைப்புள்ளியில் – நமது அறிவிற் சிறந்த, வேற்றுமையில் ஒற்றுமை கற்ற “தமிழ்ச் சமுகம் என்றும் ஒன்றிணைந்து நிற்கும்” என்பதற்கு, நம் தென் கலிஃபோர்னியா தமிழ்ச்சங்கம் நடத்திய பொங்கல் திருவிழா பெரும் சான்று.

இந்த பொங்கல் திருவிழாவில் பெரும் பங்காற்றிய அனைத்து தன்னார்வல சகோதர-சகோதரிகளுக்கும், பெற்றோர்களுக்கும், ஆசிரியர்களுக்கும், தமிழ்க்கல்வி மாணவர்களுக்கும், STYLE மாணவர்களுக்கும், அனைத்து விளம்பரதாரர்களுக்கும், மற்றும் ஆதரவாளர்களுக்கும் தென் கலிஃபோர்னியா தமிழ்ச்சங்கம் இனிய பொங்கல் வாழ்த்துகளையும், நன்றிகளையும் மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறது.

For those of you who missed our last session

(leadership series presented by Dr.V.Sankar please find the video link to the session below.)